கரூர்: கரூர் மாநகராட்சி திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவின் பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கரூர் மாநகராட்சி திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவின் பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் பொருளாதார சுதந்திரம் காண வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார். அதனைத் தொடர்து முதலமைச்சர் அவர்கள், உள்ளாட்சி துறையின் அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோது மாவட்டந்தோறும் சென்று லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் தொடங்கி வைத்து, பொருளாதார கடன், சுழல் நிதி கடன் உள்ளிட்டவற்றை வழங்கி பெண்கள், வங்கிகளுக்கு தன்னம்பிக்கையுடன் சென்று தாங்களே வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு உயர்த்தினார்.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 1,49,767 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் 53,74,000 உறுப்பினர்களுடன் 4,76,000 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 19,12,927 குழுக்களைச் சேர்ந்த 2,48,68,051 உறுப்பினர்களுக்கு 1,20,240 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்த்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகின்றார்கள்.
கரூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் 41,275 மகளிரைக் கொண்டு 3,175 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32,941 குழுக்களைச் சேர்ந்த 3,95,292 உறுப்பினர்களுக்கு 1,777.34 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி திருநகர் பகுதியில் 12 மகளிர் உறுப்பினர்களைக் கொண்டு 10.12.2021 முதல் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவினர் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு கரூர் நகர கூட்டுறவு வங்கியில் வங்கிக்கடன் இணைப்பு பெற்று தந்து, சுய உதவிக்குழு உறுப்பினர் பயிற்சி, ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பயிற்சி, பேப்பர் பை தயாரிக்கும் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி ஆகிய பயிற்சிகளும் மகளிர் திட்டத்துறையின் மூலம் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்குழுவின் உறுப்பினர்கள் பேப்பர் பை தயாரித்தல் மட்டுமல்லாது, குழுவிற்குள் வழங்கப்படும் உள்கடன் தொகையைக் கொண்டு உணவகம் நடத்துதல், டெக்ஸ்டைல் வணிகம், மருந்தகம், தையல் பணி ஆகிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கரூர் மாநகராட்சி திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவின் பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தில் பேப்பர் பை தயாரிக்கும் இயந்திர செயல்பாடு, தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பேப்பர் பைகளை பார்வையிட்டு, தயாரிக்கும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். தளிர் மகளிர் சுய உதவிக் குழுவின் வங்கி வரவு, செலவு, கடன் பெறுதல், திரும்ப செலுத்துதல், உறுப்பினர்களுக்கு உள்கடன் அளித்தல் உள்ளிட்ட குழுவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம், ஆர்.இளங்கோ, க.சிவகாமசுந்தரி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., மேயர் க.கவிதா உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கரூரில் உள்ள தளிர் மகளிர் சுய உதவிக்குழுவின் பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.