ரூ. 5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ. 6 லட்சத்தை இழந்த பெண் - நூதன சைபர் மோசடி

3 months ago 25

மும்பை,

மராட்டிய மாநிலம் கோட்கபர் சிரங் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் (வயது 31) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 26ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். செல்போன் ஆப் மூலம் ஏ.டி.எம். கார்டு இன்றி பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை. ஆனால், வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த பணம் யுபிஐ மூலம் கேரள கொரோனா பாதிப்பிற்காக முதல்-மந்திரியின் மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதி கணக்கிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் அப்பெண்ணின் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் 5 ஆயிரம் ரூபாயை மீட்க நினைத்துள்ளார். இதற்காக தேசிய பேமண்ட் கார்பரேஷன் உதவி எண்ணை குகூளில் தேடியுள்ளார். அப்போது, அவருக்கு ஒரு டோல் பிரி எண் கிடைத்துள்ளது.

அது உண்மையான உதவி எண் என்று எண்ணிய அப்பெண் அந்த எண்ணுக்கு கால் செய்துள்ளார். அப்போது, தேசிய பேமண்ட் கார்பரேஷன் பாந்திரா கிளையை சேர்ந்த ஊழியர் சுரேஷ் சர்மா என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் அப்பெண்ணிடம் பேசியுள்ளார். மேலும், மற்றொரு நம்பரில் இருந்து அழைப்பு வரும் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து, மற்றொரு எண்ணில் இருந்து அமித் யாதவ் என்ற பெயரில் அந்த பெண்ணுக்கு மற்றொரு நபர் கால் செய்துள்ளார். அந்த நபர் ஒரு ஆப்பை பதவிறக்கம் (Download) செய்யும்படி கூறியுள்ளார். இந்த நபரின் பேச்சை நம்பிய அப்பெண் ஆப்பை பதவிறக்கம் செய்துள்ளார். மேலும் தனது செல்போனின் ஸ்கிரீன் ஆக்சசை பகிர்ந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொல், பான் நம்பர், யுபிஐ கணக்கு விவரங்கள் அந்த நபருக்கு தெரிந்துள்ளது. அந்த விவரங்கள் தெரிந்த சில விநாடிகளில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 93 ஆயிரத்து 62 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ரூபாய் வீரேந்திர ரைக்வர் என்பவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்னை தொடர்பு கொண்ட அமித் யாதவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால், புதிய வங்கி கணக்கு தொடங்கியுள்ளதாகவும் எடுக்கப்பட்ட 93 ஆயிரத்து 62 ரூபாய் புதிய வங்கி கணக்கில் 24 மணிநேரத்தில் வரவு வைக்கப்படும் என்றும் அமித் கூறியுள்ளார்.

24 மணிநேரம் கழித்து பணம் வரவு வைக்கப்படாததால் கடந்த 28ம் தேதி மீண்டும் அப்பெண் அதே டோல் பிரி எண்ணுக்கு கால் செய்துள்ளார். அந்த அழைப்பை சுரேஷ் சர்மா மீண்டும் எடுத்துள்ளார். அப்போது, தனது வங்கி கணக்கில் 93 ஆயிரத்து 62 ரூபாய் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, சுரேஷ் சர்மா அப்பெண்ணின் செல்போன் இணைப்பை ராகேஷ் குமார் என்பவருக்கு கொடுத்துள்ளார்.

அந்த நபரும் அப்பெண்ணின் வங்கி விவரங்களை மீண்டும் சேகரித்து அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 6 லட்ச ரூபாய் வரை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தான் சைபர் மோசடியால் 6 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்ததை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக கோட்கபர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article