சென்னை: ரூ.4620 கோடி மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 124 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மேல்விசாரணை நடத்துமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஹிஜாவு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.4620 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்தது. மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 14 பேரை கைது செய்தனர். நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் மற்றும் ஏஜெண்டுகள் தலைமறைவாக உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 16500 பேரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. சுமார் 40 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், தாங்கள் முதலீடு செய்த ரூ.9 கோடியே 24 லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுத் தரக்கோரி ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜென்சி லின்டோ, சாய் தனுஷா, திருவண்ணாமலையை சேர்ந்த சத்யநாராயணா உள்ளிட்ட 124 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் முதலீட்டு பணத்தை மீட்டு தர வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பி.வேலுமணியன், வி.மலர்விழி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரி, மேல்விசாரணை நடத்தி துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post ரூ.4620 கோடி மோசடி புகார் ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 124 பேர் மனு: மேல்விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.