ரூ.38.10 கோடி மதிப்பீட்டில் மீன்கரை ரோடு விரிவாக்கபணி நிறைவடையும் தருவாயில் உள்ளது

3 months ago 19

*அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி : ஆனைமலை உட்கோட்ட பகுதியில் ரூ.38.10 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட மீன்கரை ரோட்டில்,விரைவில் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர் வழியாக பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில், வாகனங்கள் விரைந்து செல்லவும்,விபத்தை கட்டுப்படுத்தவும் பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்டவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு,இப்பணி கடந்த இரு ஆண்டுகளாக வெவ்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது.

இதில், பல்லடத்திலிருந்து அவினாசி,நெகமம்,பொள்ளாச்சி வழியாக, ஆனைமலை உட்கோட்டத்தில் தமிழக எல்லைப்பகுதி மீன்கரை ரோடு மீனாட்சிபுரம் வரையிலும் நான்கு வழிச்சாலையாக்கும் பணி சில மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அதிலும், ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட மீன்கரை ரோடு விரிவாக்கபணி துரிதப்படுத்தப்பட்டது. இதனை அவ்வப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலையில் அன்மையில் தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது.

நிறைவடையும் தருவாயில் உள்ள இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையின் தரம், எத்தனை ஆண்டுகள் தார் ரோடு தரமாக இருக்கும் என்பது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மீன்கரை ரோடு நான்கு வழிசாலை பணி ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதனையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் திணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, ஆனைமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் ஒரு பகுதி வாகனங்கள் மீன்கரை ரோடு வழியாக அதிகளவு செல்கிறது.மீன்கரை ரோட்டின் பெரும் பகுதியில் ரோடு விரிவாக்க பணி நிறைவடைந்தாலும், ஆங்காங்கே தடுப்புச்சுவர் ஏற்படுத்துவது,வர்ணம் பூசுவது உள்ளிட்ட சிறுசிறு பணிகள் உள்ளன.அப்பணியையும் விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மீன்கரை ரோடு விரிவாக்கத்தால், அனைத்து ரக வாகனங்களும் விரைந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்றனர்.

The post ரூ.38.10 கோடி மதிப்பீட்டில் மீன்கரை ரோடு விரிவாக்கபணி நிறைவடையும் தருவாயில் உள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article