சென்னை: ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,
1) தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்
சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர், நூல் பல படைத்துள்ளவர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவராகத் திகழ்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவுபெறுவதை தொடர்ந்து அவர்தம் தொண்டுகளைப் போற்றி அவரது நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
2) இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் தொண்டாற்றிய தமிழ் இசைப் பாடகர், திராவிட இயக்கக் கொள்கைகளை தனது தனித்துவமிக்க குரல் வளத்தால் இசைப் பாடல்களாக பாடியவர், “இசை முரசு” என முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு பெருமைகள் கொண்ட இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி அன்னாரின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
3) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்
பாரதிதாசன் (1891-1964) தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்பட்டார். அவர் “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969இல் சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர். அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.
4) வேலூர் அண்ணா கலையரங்கம் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக புனரமைக்கப்படும்
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கமானது, 1969ஆம் ஆண்டு சிறுவர் அரங்கமாகச் செயல்பட்டு, 1971ஆம் ஆண்டில் அண்ணா கலையரங்கமாகப் பெயர் மாற்றப்பட்டது. வேலூர் மாநகர மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற அரங்கமாகத் திகழ்ந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட வேலூர் அண்ணா கலையரங்கத்தினைக் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம், புதிய கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதி, நவீன எல்.இ.டி. மின் விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
5) குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் நூற்றாண்டினையொட்டி அன்னாருக்கு நாகர்கோவில் நகரில் திருவுருவச்சிலை நிறுவப்படும்
சுதந்திரப் போராட்டத் தியாகி கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணி போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர், திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மும்முறையும் தேர்தெடுக்கப்பட்டவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவர். இத்தகைய பல்வேறு பெருமைகளைப் பெற்றிருந்தாலும் எளிமையாக வாழ்ந்து ஏழை மக்களின் குரலாய் ஒலித்து, மக்கள் நெஞ்சில் மறையாமல் வாழ்பவர். குமரிக் கோமேதகம் எனப் போற்றப்பட்ட பெருமைக்குரிய ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி, அவர் தொண்டுகளைப் போற்றி அவருக்கு நாகர்கோவில் நகரில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்.
6) தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” அமைக்கப்படும்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான ஓர் ஆவண மையமாகத் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் திரைப்படங்கள் சார்ந்த புகைப்படங்கள், கதைப் புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், கலை சார்ந்த விலைமதிப்பற்ற பழைமையான மற்றும் குறும்படங்களை எண்மியமாக்கி பாதுக்காத்திடும் வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7) இதழியல் மற்றும் ஊடகவியல்
சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) அமைக்கப்படும். இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் கல்வியினை குறைந்த கட்டணத்தில் வழங்கும் வகையிலும் இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
* ரூ. 3.80 கோடியில் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் பராமரிக்கப்பட்டுவரும் அனைத்து நினைவகங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு, அவற்றை மாவட்ட அளவில் மேற்பார்வையிடுவதற்கும், மாநில அளவில் கண்காணிப்பதற்கும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
9) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு அம்மண்டபங்களிலுள்ள புகைப் படங்கள் எண்மியமாக்கப்படும்.சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்களில் ரூபாய் 2.50 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அம்மண்டபங்களிலுள்ள தியாகிகளின் புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் எண்மியமாக்கப்படும்.
10) அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் 10 மாவட்டங்களில் மின்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 28 மாவட்டங்களிலும் மின்சுவர்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்கள் மற்றும் சாதனைகளைப் பொது மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் மின்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 28 மாவட்டங்களிலும் ரூபாய் 17.85 கோடி மதிப்பீட்டில் மின்சுவர்கள் அமைக்கப்படும்.
11) தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட முதற்கட்டமாக அதிநவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களின் தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த்திடவும் கருதி, தமிழ்நாடு அரசு அமைத்த துணைக்குழுவின் பரிந்துரைகளின் பேரிலும், தரம் உயர்த்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டங்களுக்கேற்ப, 6 பாடப் பிரிவுகளுக்கும் முதற்கட்டமாக ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
12) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைந்துள்ள செய்தியாளர் அறைகளில் நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதிகள் ஏற்படுத்தப்படும்.அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் உடனுக்குடன் செய்திகளை விரைந்து அனுப்பிட ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள செய்தியாளர் அறைகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதிகள், ரூ. 41 லட்சம் (தொடரும் மற்றும் தொடரா செலவினம்)மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
The post ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.