திருவானைக்காவலில் இருந்து கொண்டு வரப்பட்ட தளிகை பொருட்கள் வைத்து சமயபுரம் அம்மனுக்கு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

2 days ago 3

திருச்சி: சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

தேரோட்டம் அன்று மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேவரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நைவேத்தியம் செய்வது வழக்கம். அதன்படி நேற்றிரவு 9 மணிக்கு திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் மாலைகள், பட்டு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மேளதாளம் முழங்க இரவு 10 மணி அளவில் சமயபுரம் வந்தனர். இந்த தளிகை மற்றும் சீர்வரிசை சமயபுரம் வந்தபின் அம்பாள் தேர்த்தட்டிலிருந்து இறங்கி கோயிலுக்கு சென்றார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், தளிகை நைவேத்தியம் செய்யப்பட்டது.

விழாவின் 11ம் திருநாளான இன்று காலை அம்மன் பல்லக்கில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தடைந்தார். அங்கு திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நாளை அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 18ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 22ம் தேதி அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாட்டுடன் விழா நிறைவடைகிறது.

The post திருவானைக்காவலில் இருந்து கொண்டு வரப்பட்ட தளிகை பொருட்கள் வைத்து சமயபுரம் அம்மனுக்கு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article