திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் சிரிசில்லாவை சேர்ந்தவர் விஜய், நெசவு தொழிலாளி. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு பட்டு வஸ்திரம் தயாரிக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 10 நாட்களாக அதனை முதல் தர பட்டுநூல் கொண்டு நேர்த்தியுடன் வடிவமைத்தார். தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு தயாரித்து முடித்தார்.
இதனை தீப்பெட்டிக்குள் அடக்கி இன்று திருமலைக்கு கொண்டுவந்து தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளராவிடம் வழங்கினார். இதுகுறித்து விஜய் கூறுகையில், `இதற்கு முன்பும் எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு பட்டு சேலையை நெய்து வெமுலவாடாவில் உள்ள ராஜராஜேஸ்வரியம்மன் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொடுத்துள்ளார். அதேபோன்று தற்போது நானும் பட்டு சேலை தயாரித்து வழங்கினேன். சுவாமியின் பட்டாடைக்காக 200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி என 48 அடி அங்குலத்தில் ₹20 லட்சம் மதிப்பில் இந்த பட்டாடையை தயாரித்தேன்’ என்றார்.
The post ரூ.20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டு வஸ்திரம்: திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை appeared first on Dinakaran.