சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கில் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு கைது செய்யப்பட்டு அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை விசாரித்து வருவதால் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், எஸ்ஐயைகாவலில் எடுத்து விசாரித்து வருவதாலும் தற்போதைய நிலையில் ஜாமீன் முடியாது என்று தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post ரூ.20 லட்சம் பறித்த எஸ்.ஐ. ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.