ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

2 hours ago 2

தஞ்சை,

தஞ்சையை அடுத்த கொல்லாங்கரை கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி சுகந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் இறந்து விட்டார். இதனால் தனது கணவர் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சுகந்தி முயற்சி மேற்கொண்டார்.

இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொல்லாங்கரை கிராம நிர்வாக அலுவலர் வள்ளி என்பவரிடம் சுகந்தி விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணபம் தொடர்பாக சுகந்தியை பல நாட்களாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அலுவலர் வள்ளி வரவழைத்தார். ஆனால் பட்டா மாற்றம் செய்வதற்கான பணி மட்டும் கிடப்பிலேயே போட்டு இருந்தார்.

பின்னர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாற்றித்தருவதாக வள்ளி கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க சுகந்திக்கு விருப்பம் இல்லை. இதனால் அவர் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கொல்லாங்கரை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை சுகந்தி எடுத்துச்சென்று கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து வள்ளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளி ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article