
சென்னை,
இந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
குறிப்பாக 2009-ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான், இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்தார். மேலும் 'மில்லியன் டாலர் ஆர்ம்', 'கப்பில்ஸ் ரிட்ரீட்', '127 ஹவர்ஸ்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில், மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்திய சினிமாக்கள் கையாளப்படும் விதம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
''ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வரும் படங்கள் என்றாலே, அவற்றை நிறவெறி பார்வையில்தான் பார்ப்பார்கள். 'இவர்கள் நாட்டில் சோற்றுக்கே வழியில்லை.. கழிவறைகள் இல்லை.. இவர்களெல்லாம் படத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டார்களா?' என்ற எண்ணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
அதை மீறி நாம் படம் எடுக்கும்போதுதான், 'எப்படி இதைச் செய்தீர்கள்?' என்ற உணர்வை அவர்களுக்குள் விதைக்க முடியும். அப்படியொரு தருணத்தை ஏற்படுத்தியதுதான் ஆர்.ஆர்.ஆர். படம். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் வழங்கும்போது, நான் அங்குதான் இருந்தேன்'' என்றார்.