கவுதம் சாந்திலால் அதானி. 62 வயதான இவரை , இன்றைக்கு இந்தியாவில் தெரியாதவர்கள் யாருமே கிடையாது. இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம், சிமென்ட் என பல துறையில் ஏகபோகம், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 22வது இடம். இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்? இதையெல்லாம் விட பிரதமர் மோடிக்கு மிகமிக நெருக்கம்!
இப்படிப்பட்ட கவுதம் அதானிக்குதான் அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. அதுவும், சூரிய சக்தி மின்சார கொள்முதல் விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில். லஞ்சம் கொடுத்தது இந்தியாவில் ஆனால், வழக்கு போட்டது அமெரிக்கா. காரணம் கேட்டால் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டு பணத்தைதான் அதானி லஞ்சமாக கொடுத்துள்ளார் என்கிறார்கள். மேலும், சூரிய மின் திட்டம் பற்றி தவறான தகவல்கள் தந்தததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன?
* அதானி மீது என்ன குற்றச்சாட்டு?
அதானியும் அவரது கூட்டாளிகளும், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சோலார் ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்(சுமார் ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்தனர் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதானி மீது வெளிநாட்டு லஞ்சம், முதலீட்டு மோசடி, பணப்பரிமாற்ற மோசடி சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க சட்டப்படி, அமெரிக்காவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்தாலும் வழக்கு தொடர அனுமதிக்கிறது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் வழக்கு தொடரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் தந்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி ஏமாற்றியதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
* அதானி கைது செய்யப்படுவாரா? நாடு கடத்தப்படுவாரா?
அமெரிக்காவில் இருந்திருந்தால் அதானி கைது செய்யப்பட்டிருப்பார். இந்தியாவில் இருப்பதால் உடனடியாக அவர் கைதாக வாய்ப்பு இல்லை. அவரை நாடு கடத்த இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைக்க வேண்டும். இதை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் பரிசீலிக்கும். அமெரிக்க அரசு தாக்கல் செய்யும் ஆவணங்கள் நீதிபதியால் ஆய்வு செய்யப்படும். அமெரிக்காவில் அதானி மீது சுமத்தப்பட்ட குற்றம் இந்தியாவிலும் குற்றச்செயலா? இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் உள்ளதா? ஒரு வேளை அமெரிக்காவுக்கு அதானி நாடு கடத்தப்பட்டால் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை பற்றியெல்லாம் நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும். இப்படி பல அம்சங்களை ஆராய்ந்து அதன் பிறகுதான் அதானியை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதா என்பது குறித்த தீர்ப்பை நீதிபதி வழங்குவார். இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை.
* குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அதானி மறுக்க முடியுமா?
ஆம், ஆனால் அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை, அதானியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டிய நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மட்டுமே வாதாட முடியும். குறிப்பாக, அதானி மீது குற்றம் சாட்ட அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடலாம். அதானி ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, அவரது வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து வாதாடலாம். அமெரிக்க அரசு தரப்பில் அதானி லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக முக்கிய அதிகாரிகளை சந்தித்தது, செல்போன் உரையாடல், வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய தகவல்கள் இருப்பதாக அமெரிக்க வக்கீல்கள் கூறியுள்ளனர். இதனால், நீதிமன்றம் அதானி மீதான வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்யாது.
* அதானி மீதான விசாரணை எப்போது நடக்கும்?
அதானி நாடு கடத்தப்பட்டாலோ அல்லது அமெரிக்காவில் சரணடைந்தாலோ கூட விசாரணை நீண்ட காலம் நடக்க வாய்ப்பு இல்லை. விசாரணை துவங்கும் முன் அதானியின் வழக்கறிஞர்கள் ஆதாரங்களின் உண்மைதன்மை உள்ளிட்ட பிற சட்ட கேள்விகளை எழுப்பி வழக்காட உரிமை உண்டு. கவுதம் அதானி உள்பட மொத்தம் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேரும் தனித்தனியே விசாரணை நடத்த கோரலாம். அமெரிக்க சட்டத்தின் கீழ் 70 நாட்களுக்குள் விரைவான விசாரணையை நடத்தி முடிக்க கோரும் உரிமை அதானிக்கு உண்டு. இருப்பினும் அவர் தனது வக்கீல்கள் வாதாட நீண்ட நாட்கள் ஒதுக்க வேண்டும் எனக் கேட்கலாம்.
* 20 ஆண்டுகள் வரை சிறை
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதானிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பண அபராதம் விதிக்கப்படலாம். இதில் வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்ததற்கு 5 ஆண்டுகள், முதலீட்டு பத்திர மோசடி, பணபரிமாற்ற முறைகேடு, சதிதிட்டம் தீட்டுதல் போன்ற குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். 12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அதானிக்கு ஒருமனதாக தண்டனை வழங்க வேண்டும். ஆனால், அந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்ய அதானிக்கு உரிமை உண்டு.
* வெள்ளை மாளிகை கூறியது என்ன?
அதானிக்கு வழங்கப்பட்ட பிடிவாரண்ட் குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறை இரண்டும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக தகவல்களை வழங்க முடியும்” என தெரிவித்தார். அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது, இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை பாதிக்குமா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்தியா-அமெரிக்கா உறவு மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டது என அவர் பதிலளித்தார்.
* அதானி ஒப்பந்தத்தை இலங்கையும் ரத்து செய்கிறதா?
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், அதானி குழுமத்துடன் செய்து கொண்ட ரூ.5900 கோடி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து இலங்கை அரசும் அதானியின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகா வாட்டுகள் மின்சார உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட இருந்தது.
இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பான வழக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதானியுடனான ஒப்பந்தத்தை இலங்கை அதிபர் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ரூ.2,100 கோடி லஞ்ச புகாரில் பிடிவாரன்ட்: அதானி கைதாவாரா நாடு கடத்தப்படுவாரா? அடுத்து நடக்கப்போவது என்ன? appeared first on Dinakaran.