தமிழகத்தில் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து, மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய முதல்வர், அங்கிருந்து வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்தோருக்கு கை கொடுத்து மகிழ்ந்தார். அப்போது, ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.