சென்னை: ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கு ரூ1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொழில்நுட்ப வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட இந்த அரங்கத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். இவ்வரங்கம் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 280 நபர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், Live Camera உட்பட நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி ஒளி அமைப்பு, LED Video Wall மற்றும் உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III, 10-தட்டச்சர் மற்றும் ஒரு நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை-II, மொத்தம் 56 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் போது காலமான ஆசிரியர்களின் குழந்தைகள், தொழிற்நுட்பக் கல்வி படிப்புகளான பொறியியல், வேளாண்மை, செவிலியர், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டப்படிப்பு (4 ஆண்டுகள் அதற்கும் மேற்பட்டவை) மற்றும் பட்டயப் படிப்பு பயில்வோருக்கு ஆசிரியர் நல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு 12 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.
அதில் முதற்கட்டமாக 4 மாணவர்களுக்கு தலா ரூ.50000 வீதம் மொத்தம் ரூபாய் 2 இரண்டு இலட்சத்துக்கான கல்வி உதவித்தொகையினை வழங்கினார். இந்நிகழ்வில் பொது நூலகத்துறை இயக்குநர் பொ.சங்கர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) த.ராஜேந்திரன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித் திட்டம்) சசிகலா, பொது நூலகத் துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், துணை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் மு.கவிதா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.