
ராஞ்சி,
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு கருவியாக சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன.
இதை பெரும்பாலானோர் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் ஆபத்தான காரியங்களில், குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து 'ரீல்ஸ்'களை உருவாக்க முயலும்போது சில சம்பவங்கள் விரும்பத் தகாதவையாக மாறி விடுகின்றன. பொழுதுபோக்குக்காக, மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக 'ரீல்ஸ்'களை உருவாக்கி வெளியிடுவது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு சிலர்'ரிஸ்க்' எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர வேண்டும்.
அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதி கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட பெண் தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில், அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா..அம்மா..என்று கதறி கூப்பிடுவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அப்பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.