
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
ஆனால், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால், இ.ஒ.எஸ்-09 செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் திட்டம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் ஏவப்பட்டு 2 கட்டங்கள் வெற்றியடைந்த நிலையில் 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. இது குறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு நாங்கள் மீண்டு வருவோம்' என்றார்.