ராயநல்லூர்-மானியம் ஆடூர் இடையே இணைப்பு பாலம் அமைத்து தரவேண்டும்

3 months ago 16

*கிராம மக்கள் வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ராயநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகில் உள்ள மானியம் ஆடூர், லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமம் வழியாக வீராணம் ஏரி கரையோரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்தில் ஏறி சுமார் 15 கிலோமீட்டர் கடந்து சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

இதுபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அனைத்து தரப்பினரும் சுற்றி தான் அனைத்து நகர்ப்புற பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் ராயநல்லூர் கிராமத்தில் இக்கிராமத்தையும் மானியம் ஆடுர் கிராமத்தையும் இணைக்கும் பெரிய மதகு ஓடை உள்ளது. அந்த ஓடை வழியாக வெயில் காலங்களில் தண்ணீர் இல்லாத போது பொதுமக்கள் அருகே உள்ள மானியம் ஆடூர் கிராமம் வழியாக வெறும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்று அருகே உள்ள மானியம் ஆடூர், லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

மழைக்காலங்களில் அல்லது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போதும் இந்த ஓடையில் தண்ணீர் செல்வதால் இவர்களால் கடந்து செல்ல முடியவில்லை. ஆகையால் மேலே பண மரத்தை வெட்டி போட்டு அதில் நடந்து சுலபமாக அருகே உள்ள மானியம் ஆடூர் பகுதியில் உள்ள கடைவீதிகளுக்கு, விவசாய வேலைகளுக்கு சென்று வந்தனர். ஆனால் சில சமயங்களில் வயதானவர்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், பெரிய மதகு ஓடை மீது பாலம் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் தெரிவிக்கையில்,பெரிய மதகு ஓடையின் மீது பாலம் அமைத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அருகே உள்ள மானியம் ஆடூர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதிகளுக்கு சென்று வர சுலபமாக இருக்கும். தற்போது 15 கிலோமீட்டர் கடந்து சுற்றி சென்று வருகின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு ஏதாவது ஆபத்து என்றால் கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் 15 கிலோமீட்டர் கடந்து தான் வருகிறது. இந்த பாலம் அமைக்க நான் மற்றும் 2 ஊராட்சி மன்ற தலைவர்களும் சேர்ந்து பல முறை கோரிக்கை விடுத்து வருகிறோம். பாலம் அமைக்க எங்கள் நிலத்தை கூட தருவதற்கு தயாராக இருக்கிறோம். இதனால் சுற்றி செல்லும் நிலை ஏற்படாது.

வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகளை பாம்பு, பூச்சி கடித்தால் கூட பல கிலோமீட்டர் சுற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகிறோம். ஆகையால், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலமாக இணைப்பு பாலம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.

The post ராயநல்லூர்-மானியம் ஆடூர் இடையே இணைப்பு பாலம் அமைத்து தரவேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article