திங்கள்சந்தை : நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்செல்வவிளையில் வேம்பனூர் குளம் உள்ளது. இந்த குளத்தையொட்டி ஆசாரிப்பள்ளத்திற்கு பிரதான சாலை செல்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் விளையும் பகுதியில் வேம்பனூர் குளம் ஏலாவிற்கு முக்கிய இடம் உண்டு.
நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்வெளிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம் ராம் சார் அங்கீகாரம் பெற்ற வேம்பனூர் ஈரநிலம் ஆகும். இங்கு கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் பறவைகளை வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஈர நிலப்பகுதி மாவட்ட வனத்துறை மற்றும் வேளாண்மை துறை நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த குளத்தின் கரையோரம் குப்பைகளை கொட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த குப்பைகள் நீர் நிலைகளில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனிடையே அந்த பகுதியில் பழைய துணி, பெட்ஷீட் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் அதை தீ வைத்து கொளுத்தி சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த தீ சாலை ஓரம் கருகிய செடிகளில் பரவி அப்பகுதியில் நடப்பட்டிருந்த ஒரு சில மரக்கன்றுகளும் கருகியது. இதே போன்று அந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்படுகிறது. இது அங்கு வரும் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு குப்பை கழிவுகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post ராம்சார் அங்கீகாரம் பெற்ற வேம்பனூர் குளத்தின் கரையோரம் தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.