ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 425 விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்திய கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, கச்சத்தீவு பகுதியில் இருந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். தொடர்ந்து சிறைபிடிக்க வந்ததால், மீனவர்கள் வலைகளை கடலிலேயே வெட்டி விட்டு தப்பி வந்தனர். கடலில் இருந்து படகின் உரிமையாளர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய மீனவர்கள் கூறுகையில், ‘‘வலையை கடலுக்குள் இறக்கிய ஒரு மணி நேரத்தில் எல்லையோரம் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையால் வலைகளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்கு ஓடினோம். இதில் 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை கடலில் வெட்டி தப்பினர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் பகல் முழுவதும் மீன்பிடிக்க முடியாமல் அச்சத்தில் கடலில் கிடக்கி றோம்’’ என்று தெரிவித்தனர். தடைக்காலத்திற்கு பிறகு மூன்றாவது நாள் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்கி விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.