உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில் கன்னட மொழி குறித்து கமல் பேசுவதற்கு தடை: பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு

2 hours ago 2

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து பேச கமலுக்கு தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ‘கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்‌ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கமல்ஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட, ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை ராஜ்கமல் நிறுவனம் அணுகியது. அந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, ‘நடிகர் கமல்ஹாசன் என்ன மொழியியல் நிபுணரா?’ என்று கேள்வி எழுப்பியதோடு, ‘மன்னிப்புக் கேட்பதில் என்ன தயக்கம்?’ என்று கேட்டிருந்தார். ஆனால் அதன் பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த தடையை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர், ‘ஒருவரின் கருத்தில் தவறு இருக்கிறது என்றால், அது தொடர்பாக விவாதம் நடக்கட்டும். அவர் கூறியது தவறு என்று மக்கள் சொல்லட்டும். ஆனால் உயர் நீதிமன்றம் அந்த கருத்திற்காக கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க ஏன் கோர வேண்டும்? அது நீதிமன்றங்களின் வேலை அல்ல’ என்று நீதிபதி காட்டமாக கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக கன்னட மொழியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ‘கன்னட சாகித்ய பரிஷத்’ என்ற அமைப்பு, பெங்களூரு நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, எதிர் தரப்பினரின் வாதங்களைக் கேட்காமலேயே பிறப்பிக்கப்பட்ட இந்தத் தடையாணையில், ‘கன்னட மொழியை விடத் தங்கள் மொழி உயர்ந்தது என்றோ அல்லது கன்னட மொழி, இலக்கியம், கலாசாரத்தைப் புண்படுத்தும் வகையில் அல்லது அவதூறு செய்யும் வகையிலேயோ கமல்ஹாசன் எந்தவிதமான அறிக்கைகளையோ, கருத்துக்களையோ வெளியிடவோ, எழுதவோ, பதிவிடவோ கூடாது’ என்று கடுமையாக உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையானது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையான ஆகஸ்ட் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில் கன்னட மொழி குறித்து கமல் பேசுவதற்கு தடை: பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article