ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு காரணமாக 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 10 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. பாம்பனில் 3 மணி நேரத்தில் 19 செ.மீ. பதிவானது. இதனால் மீனவ குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரையிலும், தனுஷ்கோடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவு கடலோரப்பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது.
இதனால் ராமேஸ்வரத்தில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. பேருந்து நிலையம் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வெளியே செல்லாமல் விடுதிகளில் முடங்கினர். தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தங்கச்சிமடத்தில் முருகன் கோயில் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் மிகக் குறுகிய இடத்தில் வலுவான மேகக் கூட்டம் சேர்ந்ததால் அங்கு மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அதிக கனமழை நேற்று பெய்தது. பாம்பனிலும் ஏற்பட்ட மேக வெடிப்பால், காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை 3 மணி நேரத்தில் 19 செமீ மழை கொட்டி தீர்த்தது. இங்கு ஒரே நாளில் 23.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது, 1955ம் ஆண்டுக்கு பிறகு பாம்பனில் பெய்த அதிகப்பட்ச மழை ஆகும். இதனால் பாம்பனில் தாழ்வான பகுதிகளான மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 வரை தொடர்ந்து 10 மணி நேரம் பெய்த கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1 செமீ பதிவானது. தங்கச்சிமடத்தில் 32.2 செ.மீ, மண்டபத்தில் 26.14 செமீ, பாம்பனில் 23.7 செமீ மழை பதிவானது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை 3 மணி நேரத்தில் மட்டும் 36.2 செ.மீ கனமழை பெய்தது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடலின் நீர்மட்டம் உயர்ந்ததால் தெருக்களில் ஓடும் மழைநீர் கடலில் கலக்க முடியாமல் தேக்கமடைந்து உள்ளது.
நாகையில் மழை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கிய கனமழை நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் விடாமல் பெய்த மழையால் வயல்களில் நீர் சூழ்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் மூழ்கியது. வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 5000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அதிகபட்சமாக கோடியக்கரையில் 4 மணி நேரத்தில் 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 30 செ.மீ, வேதாரண்யம் 15 செ.மீ, தலைஞாயிறு 12செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது. இதனால் மாநகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று காலை வரை நல்ல மழை பெய்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது. தென்காசி மாவட்டத்திலும் மழை கொட்டியது. குற்றாலத்தில் வெள்ளம் காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
* நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது, கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக 23ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
ஆனால் 23ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை கடலோரப் பகுதிகளில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை 90 டிகிரியாக இருக்கும். மேலும், வங்கக் கடல் பகுதியில் தென் கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 23ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு: 41 செமீ மழை கொட்டியது: பாம்பனில் 3 மணி நேரத்தில் 19 செ.மீ.; வரலாறு காணாத மழையால் மீனவ குடியிருப்புகளில் வெள்ளம்; டெல்டா, தென் மாவட்டங்களிலும் கனமழை appeared first on Dinakaran.