சிவபெருமானால் மலர் மகுடம் சூடப்பட்டவர் சண்டேசுவர நாயனார். சோழநாட்டில் பிறந்தவரான இவர் திருக்கயிலை சிவனடியில் வீற்றிருக்கிறார் என்று புராணத்தில் இடம் பெற்றுள்ளது. சேங்கனூரில் உள்ள சக்தி கிரி மலையில் அமர்ந்து முருகப்பெருமான் சிவபெருமானை வழிபாடு செய்தார். அவரின் வழிபாட்டின் பரிசாக அம்பிகை அவருக்கு ஆயுதத்தை வழங்கியதாக
புராணம் கூறுகிறது. கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் திருப்பனந்தாளுக்கு முன்பாக 5 கி.மீ. தொலைவில் சேங்கனூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து
வருபவர்கள் சேங்கனூர் வந்து வலப்புறம் 1 கி.மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம்.
கோயிலின் கிழக்குப்புறம் சண்டேசுவரர் அவதாரத்தலம் என்றும், மேற்குப் பகுதி வைணவப் பெரிய வாச்சான் பிள்ளையின் அவதாரத் தலம் என்ற குறிப்பு பொறிக்கப்பட்டுள்ளன. வரவேற்பு வாயிலைக் கடந்து சென்றால், ஊரின் நடுவே கிழக்கு நோக்கியவாறு சிவன் கோயிலும், அதற்கு எதிரில் மேற்கு நோக்கியவாறு நிவாசப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இவை இரண்டிற்கும் நடுவே தேரடிப் பிள்ளையார் கோயில் கொண்டுள்ளார். திருமதில் பிள்ளையார் என்று அழைக்கப்படும் இவரை வணங்கி மேற்கே சென்றால் சிவாலயத்தை அடையலாம்.
சக்திகிரீசர் ஆலயம் சுமார் 12 அடி உயரத்தில் விசாலமாக அமைந்த மேடையின் மீது உள்ளது. இந்த மேடை அமைப்பே சக்தி கிரியாகும். முருகப்பெருமான் இமயமலையின் நடுவில் இருந்த சக்தி கிரியை எடுத்து வந்து இங்கே அமைத்து வழிபட்டதாகக் கூறுகின்றனர்.சோழ மன்னன் இந்த மலையை சுற்றிச் சுவர் எழுப்பி மாடக் கோயிலாக்கியதாக கூறப்படுகிறது.
மலை மீது உள்ள கருவறையில் சக்தி கிரீசர், குமாரகிரீசர், சத்யகிரீசர் என்னும் பெயர்களில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். வாயிலின் முகப்பில் உள்ள தோரணவாயிலில் அமைந்துள்ளது. சிவபெருமானை சண்டீசர் வழிபடும் காட்சியும் சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரிய மண்டபத்தில் சண்டேசுவரர் வரலாற்று ஓவியங்களின் கீழ் பெரிய புராணப் பாடல்கள் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. இந்த முற்றத்தில் தெற்கு நோக்கியவாறு பாலசுப்பிரமணியர், சிவபெருமானைப் பூஜித்து அன்னையிடம் சக்தி ஆயுதம் பெற்றதை நினைவுகூரும் வகையில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இவரை வணங்கி, பதினாறு படிகள் ஏறினால் சக்திகிரீசுவரர் சந்நதியை அடையலாம். வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி அமைந்த சந்நதியில் சத்திய தயாக்ஷி என்ற பெயரில் உள்ள பராசக்தியை தரிசிக்கலாம். பிராகாரத்தை வலம் வந்தால் கருவறையில் சக்தி கிரீசர் என்ற பெயரில் சிவலிங்கமாகக் காட்சி தருகிறார் பெருமான். கருவறை மீது ஒற்றைக் கலசம் கொண்ட விமானம் அமைந்துள்ளது.கருவறையைச் சுற்றி திறந்த வெளிப் பிராகாரமும் அதைச் சுற்றி திருமாளிகைப் பத்தி மண்டபமும் உள்ளன. மேற்கில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், மகாலட்சுமி ஆலயங்கள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் கோமுகிக்கு அருகில் சிறிய சந்நதியில் சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு மாதமும் உத்திர நாளில் சண்டேசுவரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சண்டேசுவர நாயனார் இங்கு அவதரித்திருந்தாலும் அவர் ஆப்பாடியில் முக்தி அடைந்துள்ளார். கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் வடக்கில் அமைந்துள்ள சேங்கனூருக்குச் சென்று சத்தியகிரீசப் பெருமானையும் முருகனையும் சண்டேசுவரரையும் திருமலை வரதனான நிவாசப் பெருமாளையும் வணங்கிய பிறகு ஆப்பாடிக்கு செல்லலாம்.
அங்கு வாயிலின் இடப்புறம் தட்சிணாமூர்த்தியின் கல் திருமேனி நிலைப் படுத்தப்பட்டுள்ளது. இவரை வணங்கி பெரிய முற்றத்தை அடைந்தால், அங்கு நந்திதேவர், பலிபீடத்தினை காணலாம். மண்டபத்தின் வடக்கில் தெற்கு நோக்கியவாறு அம்பிகை பெரிய நாயகியின் சந்நதி உள்ளது. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். கருவறையில்
தீபாராதனை செய்த உடன் இவருக்கு வழிபாடு செய்வது வழக்கம்.இது சண்டேசுவரர் முக்திப் பெற்ற தலம் என்பதால், சிவபெருமானுக்குப் பூஜை முடிந்ததும் இவருக்கு வழிபாடு செய்வதாகக் கூறுகின்றனர். இது திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
மகி
The post நெஞ்சுறுதியை அருளும் சண்டேசுவர நாயனார் appeared first on Dinakaran.