
ராமேஸ்வரம்,
மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு இயங்கி வந்த 2 அன்னிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை, சோதனை என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேற்படி நிறுவனங்களுக்கு சொந்தமாக ராமேசுவரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் அறைகள் மற்றும் நிலம் என ரூ 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் முடக்கியிருந்தனர். தற்போது இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்த விடுதியில் 60 அறைகள் மற்றும் தரிசு நிலம் ஒன்றை கையகப்படுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.