
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு கடந்த 2-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரி மற்றும் மகனுடன் வந்து அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி தரிசனம் செய்தார். அப்போது மறைந்த தனது பெற்றோர், மனைவியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி தர்ப்பண பூஜையும் செய்தார். மேலும் அவர் இங்கிருந்து தீர்த்தம் மற்றும் மணலுடன் காசி சென்றிருந்தார்.
இந்நிலையில் காசி யாத்திரை முடிந்து அங்கிருந்து காசி தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது சகோதரிகள் மற்றும் மகன் ரவீந்திரநாத்துடன் மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். அவர் கங்கை தீர்த்தம் அடங்கிய கலசத்தை கோவிலின் விசுவநாதர் சன்னதி எதிரே வைத்து ருத்ராபிஷேக பூஜை செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரிகள், மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடராஜர் சன்னதி, பதஞ்சலி மகரிஷி ஜீவசமாதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தனர். அப்போது தர்மர் எம்.பி., நகரசெயலாளர் ராமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.