இனிமேலும் போர் வேண்டாம்!

4 hours ago 3

உலகில் உள்ள 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் ரோமில் உள்ள வாடிகன் நகரில் இருக்கும் போப் ஆண்டவர்தான். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் சொல்வதுதான் வேதவாக்கு. போப்பை அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சீடராகவே கருதுகிறார்கள். ஏனெனில் முதல் போப் இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித பீட்டர்தான் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு மீனவர். அதனால்தான் அவருக்கு பின் வந்த போப் அனைவரும் மீனவர் உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்திருப்பார்கள். போப் இறந்தவுடன் முதலில் அந்த மோதிரத்தைத்தான் உடைப்பார்கள். மேலும் ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுடைய சொந்த பெயருக்கு பதிலாக புதிதாக இறை பெயரை சூட்டிக்கொள்வார்கள்.

இந்த வரிசையில் 266-வது போப் பிரான்சிஸ் கடந்த மாதம் ஈஸ்டர் திங்களன்று இறந்தார். அவருக்கு பதிலாக புதிதாக 267-வது போப் தேர்வு நடந்தது. போப்பை உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்கள் என்ற மூத்த பாதிரியார்கள்தான் தேர்வு செய்வார்கள். அகிலம் முழுவதிலும் 252 கார்டினல்கள் இருக்கிறார்கள். இதில் 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்கள்தான் வாக்களிக்க உரிமையுடைவர்களாக இருந்தார்கள். இவர்களில் இந்தியாவில் இருந்து 4 கார்டினல்கள் வாக்களித்தனர். மொத்த கார்டினல்களில் மூன்றில் 2 பங்கு கார்டினல்கள் வாக்களித்தவரையே போப் ஆக தேர்வு செய்யமுடியும். இந்த தேர்தல் பல நூற்றாண்டுகளாக பரம ரகசியமாகவே நடக்கும். மூன்றில் இரண்டு பங்கு வாக்குளை ஒருவர் பெறும் வரையில் திரும்ப, திரும்ப நடக்கும்.

வாடிகனில் உள்ள சிஸ்டின் சிற்றாலயத்தில் இருந்து வெள்ளை புகையை வெளியேற்றித்தான் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உலகுக்கு அறிவிக்கப்படும். அந்த பாரம்பரியப்படி கடந்த 8-ந்தேதி புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை புகை வெளியேறியவுடன் மூத்த கார்டினல் ஒருவர் வந்து ஹபேமஸ் பாப்பம் அதாவது எங்களுக்கு ஒரு போப் இருக்கிறார் என்று அறிவித்தவுடன் மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியது. போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரிவோஸ்ட் புனித பீட்டர் சதுக்கத்தில் உள்ள மாடத்தில் இருந்து மக்களுக்கு காட்சியளித்தார்.

69 வயதான அவர் தன் பெயரை 14-வது லியோ என்று மாற்றிக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து இப்போதுதான் முதல் போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 19 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள பள்ளிக்கு வந்திருக்கிறார். தமிழர்கள் பற்றி நன்கு அறிந்தவர். இதேபோல கேரளாவுக்கும் 2 முறை வருகை புரிந்திருக்கிறார். புது போப் மாடத்தில் மக்களுக்கு முதன் முதலாக காட்சியளித்தபோது இத்தாலி, ஸ்பானிஷ் மொழியில் 'உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக' என்று சொல்லி உலகம் முழுமைக்கும் ஆசி வழங்கினார்.

மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மக்களுக்கு அருளாசி வழங்கும்போது, 'இனிமேலும் இந்த உலகத்தில் போர் வேண்டாம்' என்று கூறி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் நிறுத்தம் குறித்து, 'கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று தெரிவித்துவிட்டு, 'அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை மூலம் நீடித்த உடன்பாடு ஏற்பட்டுவிடும்' என்று நம்புவதாக உறுதிபட தெரிவித்தார். இதுபோல் உக்ரைன்-ரஷியா போரும் முடிவுக்கு வந்து அமைதி ஏற்படவேண்டும் என்றும், 'காசாவிலும் முழுமையான அமைதி திரும்பவேண்டும்' என்றும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆக, புது போப் போரில்லாத உலகத்தையே மிகவும் விரும்புகிறார். அந்த வகையில் அவரது பங்களிப்பு இருக்கும் என்று உலகம் நம்புகிறது.

Read Entire Article