
ராமநாதபுரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்க பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் காட்சி தந்தனர்.
திருவிழாவின் 6-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், 7-ம் நாளான நாளை மாலை 4 மணிக்கு தங்க பல்லக்கில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் விழாவும், சிவராத்திரி தினமான வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டமும், இரவில் வெள்ளி தேரோட்டமும் நடக்கிறது.
அன்றைய தினம் சிவராத்திரி என்பதால் அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.