ராமேசுவரம் அருகே கடல் பகுதியில் பறந்த மர்ம டிரோன் - உளவு பிரிவு போலீசார் விசாரணை

4 hours ago 2


ராமேசுவரத்தில் மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும், ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கடல் அட்டை, பீடி இலை, மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றன. அதேபோல் இலங்கையில் இருந்தும் கடத்தல்காரர்கள் மூலம் தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மர்ம டிரோன் பறந்து சென்றதாக கடற்படையின் ரேடாரில் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் ராமேசுவரத்தில் உள்ள மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் பறந்து சென்ற டிரோன் எந்த பகுதியில் இருந்து வந்தது? யார் மூலம் பறக்க விடப்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் சுற்றுலாத்துறை குறித்த தகவலுக்காக டிரோன் கேமரா பறக்க விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் உளவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article