ராமா என்ற இரண்டு எழுத்து மந்திரம்!

11 hours ago 2

ஸ்ரீராம நவமி 6.4.2025

நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தைக் காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.
1. சாமானிய தர்மம்,
2. சேஷ தர்மம்,
3. விசேஷ தர்மம்,
4. விசேஷதர தர்மம்.

இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.

இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.

எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”.

இறைவனுக்குத் தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன். இது “விஷேசதர” தர்மம்.

இது சைவத்திலும் உண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா’’ என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை’’ என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

காயத்ரி மந்திரமும், ஸ்ரீ ராமாயணமும்

சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற வகையில் 24 ஆயிரம் ஸ்லோகங்களை வான்மீகி செய்தார். இதைப் போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயணசாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச் சொல்வது ராமாயணம். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்கொண்டால் என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச் சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச் சொல்லுகின்றது மகாபாரதம். அதனால்தான் “இதிகாசங்களில் சிரேஷ்டமானது ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசனபூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

சீதையின் பெருமையா? ராமனின் பெருமையா?

ஸ்ரீ ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக் கூறுவதாகச் சொன்னாலும், அது சீதையின் பெருமையை பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான் ரிஷிகள் சொல்லுகின்றார்கள். ஆழ்வாரும் தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறை இருந்தவளின் பெருமையைச் சொல்வதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

``தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர் அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே’’
– என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள் கருத்து.

முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார். எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம் வரும். முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட.

‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி
அவந்திகா புரி த்வாரவ திஸ்ைவ
சப்த ஏகா மோக்ஷ தாயகா’

என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு சேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும் வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி. (யுத்தங்களால் வெல்லப்படாத பூமி). மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார், என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது. அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் என்ற ஐதீகம்.

ஸ்ரீராமபிரான் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின் அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியைப் புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத்தினுள், சுவர்களில் ஸ்ரீராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

சரயுநதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல, உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி சரயு.

இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.

(பால-ஆற்றுப்படலம்-24) என்று நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயுநதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சரயுநதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன. கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.

ராமரின் அவதாரதினமான ராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னுமிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.

ராமர் இந்த உலக வாழ்வை முடித்துத் கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள் இதை விவரிக்கக் கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும் பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம்தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.

ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ’’ எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம’’ என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும் எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக் குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே ஸிதே பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு” என்பது ராமர் அவதாரத்தைக் குறிக்கும் ஸ்லோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார் என்பதை இந்த ஸ்லோகம் சொல்லு கின்றது. “மேஷார் த்ரா ஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1. இருவரும் உலகைரமிக்கச் செய்தவர்கள்.
2. இருவர் பெயரிலும் “ராம” என்ற நாமம் உண்டு.
3. இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4. இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5. இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு கொண்டவர்கள்.

ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்ற போது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது. மேல் நிலைக்குச் செல்வது. இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல்லுவார். எல்லோரையும் உயரே ஏற்ற, கீழே இறங்க வேண்டும். கீழே இறங் குதல் தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வது தான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு. எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல். அதனால் தானே ராமன் காட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள் அழுதார்கள்.

“கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்’’ – (நகர் நீங்கு. 100)

என்று இந்தக் காட்சியின் மாட்சியைதி திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

தோல்வியே இல்லை

1. அவன் ஜெயராமன்.
2. ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3. ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4. “ஒக பாணமு” என்று தியாகய்யர் ராமபாணத்தின் பெருமையைப்பாடுவார்.
5. ‘‘தோலா வீரன்” என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6. எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

ஏன் ராமன் பெயர் இல்லை?

ஒரு அருமையான பாட்டு.
“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!’’

இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.

சரி.இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.

பட்டாபிஷேகம் என்கின்ற அந்த கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான். ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,

ராமர் சூடிய கீரிடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

ஏன் சித்திரையில் ஸ்ரீராம நவமி?

ஸ்ரீராம நவமி ஆனது சித்திரை மாதத்தில் வருகின்றது. ராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பது போல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது, அவதரித்தான்.

வசந்த ருதுவும் ராம நவமியும்

பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததாஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: 10- 35

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும், மாதங்களில் நான் மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு.

ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் ராமபிரான்?

ராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப்பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.

இதற்கு என்ன காரணம் என்றால், ஒரு முறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகா விஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமாவதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரிய வர்கள் சொல்லுகின்றார்கள். முனிவரின் வாக்கு பொய்யாகிவிடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக்கொண்டான். இந்த சாபத் தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

ஸ்ரீ ராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒருசில ஸ்லோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘‘ராம கோடி’’ என்று பெயர். தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம் எழுதி பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?

அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. ‘‘ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே’’ என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் ஸ்பிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது. எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. ‘‘ர’’ என்ற எழுத் துக்கு எண் 2ம், ‘‘ம’’ என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத் தில் ‘‘ராம’’ என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

அதாவது 2×5 2×5 2×5. என்றால் 2×5=10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)

யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின் குணங்கள் பற்றி அழகான தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. ராமாயணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கியவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6. துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி (முறை)

1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறு கோயில் சந்நதியிலோ அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்

ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி) என்றால் ‘‘இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக’’ என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வா றாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல. கடைசி பகுதியாகிய (ஆஸ) என்பதன் பொருள் ‘‘இருந்தது’’. அஸ் என்றால் ‘‘இரு’’ (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.

அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதிகாசங்கள் இரண்டு. ஒன்று. ராமாயணம். இன்னொன்று மகா பாரதம். வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதிகாசங்கள். மஹாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். ராமாயணத்தில் வால்மீகி முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிரமத்தில் வளர்க்கிறார்.

ராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

ராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது ராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை ராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

“அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே’’

மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம் பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட ராமன் தன் சரிதை (கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும் போது அமுதம்கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் ராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் ராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ராமாயணத்தையும் மகாபாரதத் தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்பதால்,

“கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே’’
– என்று நம்மாழ்வார் பாடினார்.

வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர் ராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். ராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக் கொண்டுதான் ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார், ‘‘படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்’’ என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் ராமாயணம் ராமானுஜர் நெஞ்சத்தில் இருக்கு மாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமா யணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம். ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம். உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அதுதான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

The post ராமா என்ற இரண்டு எழுத்து மந்திரம்! appeared first on Dinakaran.

Read Entire Article