
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக வேதாளை வடக்கு கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை குழு ராமேஸ்வரம், வேதாளைக்குச் சென்றது. அங்கு ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையைச் சேர்ந்த ஆர். சதீஸ்வரன் (20 வயது), என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வைகை நகர் ரெயில் பாதை அருகே உள்ள முட்புதர்களில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக, ராமநாதபுரம் வெத்தலையைச் சேர்ந்த எஸ். காமேஷ் (25 வயது), கே. வினோத் கண்ணன் (35 வயது) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வேதாளையைச் சேர்ந்த சசி மற்றும் கோபி ஆகியோர், வட மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க, ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.