சென்னை: ராமதாஸ் கூட்டிய செயற்குழு சட்டவிரோதம் என பாமக தலைவர் அன்புமணி நடத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
தமிழ்நாட்டின் பொதுவான அரசியல் சூழ்நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஜூலை 25 ஆம் தேதி முதல் கட்சித்தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது
தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களால் 16.07.1989 ஆம் நாள் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரலாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்கட்சி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வன்னியர்கள், இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் ஆகியோருக்கு மாநில அளவிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தேசிய அளவிலும் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள். அவரது வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புகளுக்கு உரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்திச் செல்லப் போவதாக கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடந்த ஏப்ரல் 12 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டு இருந்ததை இந்தக் கூட்டம் நினைவு கூறுகிறது. அவரது நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் கொண்டாடுகிறது; போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு; பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதி 15ன் படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை இக்கூட்டம் நினைவு கூர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் அழைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை ஆகும்.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியினை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு கூட்டம் உறுதி ஏற்கிறது
2. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் அரசைக் கண்டித்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் வரும் ஜூலை 20 ஆம் நாள் போராட்டம்
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுஇன்றுடன் 1194 நாள்களாகியும் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை வழங்கப்பட்டு 30 மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை இடைக்கால பரிந்துரை அறிக்கை கூட வழங்கப் படவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் முன்னேறிவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அதைக் காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் ஜூலை 11ஆம் நாளுக்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அறிக்கை பெற்று வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது. அதை செய்ய தமிழக அரசு மறுத்தால் வன்னியர் சங்கத்தின் நிறுவன நாளான ஜூலை 20ஆம் நாள் தமிழகத்தை ஆளும் சமூக அநீதி அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் விழுப்புரத்தில் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துவது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
3.பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்!
தமிழ்நாட்டின் சமூகநீதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு வரும் 16ஆம் தேதியுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்து 37ஆம் ஆண்டு தொடங்குகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 36 ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி சாதித்தவை ஏராளம். பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை எழுத முடியாது. கடந்த 36 ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் என்னென்ன நன்மைகளை செய்தது என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இது சிறந்த தருணமாகும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாடு முழுவதும், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மீறாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றி கட்சிக் கொடிகளை ஏற்ற வேண்டும் என்று மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிராம நிர்வாகிகளை இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை புதுப்பித்து கொடியேற்றும்படியும் பா.ம.க. நிர்வாகிகளை அரசியல் தலைமைக் குழு கேட்டுக் கொள்கிறது.
4.அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி சார்பில் போராட்டங்கள்
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில், அதாவது 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; அதுமட்டுமின்றி, 9 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கல்லூரி முதல்வர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தும் கூட பொறுப்பற்ற அரசு கோரிக்கையை ஏற்கவில்லை.
இதேநிலை நீடித்தால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்கும் கல்வி இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர்கள் பணியிடங்களையும், உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வலியுறுத்தி முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ள 96 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முன்பும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அணியான பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் அடுத்த வாரத்தில் போராட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
5. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்போம்!
தமிழ்நாட்டு மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக நீதி, கல்வி, வேலை உள்ளிட்ட எந்த உரிமைகளும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் படும் துன்பங்களும், துயரங்களும் சொல்லி மாளாது.
அரசின் இந்த அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், மக்களிடமிருந்து மோசமான ஆட்சியால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலையாயக் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது. இந்த பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளை இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
6. திருப்புவனம் காவல் நிலையக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்புரம் கோயிலுக்கு வந்த பெண்மணி ஒருவர் அளித்த பொய்யான புகாரில், கோயிலின் காவலர் அஜித்குமாரை சட்டவிரோதமாக அழைத்து வந்து விசாரித்த காவலர்கள், அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்படுள்ளனர்; காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையல்ல.
அஜித்குமார் மீது புகார் அளித்த பெண்மணி, அவரை கைது செய்து விசாரிக்கும்படி இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவர் மூலமாக காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதன்படி காவல்துறை உயரதிகாரி ஒருவர் பிறப்பித்த ஆணைப்படி தான் அஜித்குமாரை காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது தொடர்பாக அரசு அமைதிக் காப்பது சரியல்ல. அஜித்குமார் மீது பொய்யான புகார் கொடுத்த பெண்மணி, அவருக்காக காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த இ.ஆ.ப. அதிகாரி, அதன்படி காவல்துறைக்கு கட்டளைப் பிறப்பித்த காவல்துறை உயரதிகாரி ஆகியோர் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்; அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு; சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், முதியோர் என யாருக்குமே பாதுகாப்பற்ற நிலை தான் நிலவுகிறது. பள்ளிக்கூடங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பண்ணைத் தோட்டங்களில் வாழும் மூத்த குடிமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தாக்கப்படும் அவலமும் தொடர்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் இதுவரை தமிழகத்தில் 7500 படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகம் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 8 படுகொலைகள் கூலிப்படைகளை வைத்து நிகழ்த்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டியது அவர்களின் பணி ஆகும். ஆனால், இவையெல்லாம் அவருக்கு தெரியுமா? என்பதைக் கூட நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படி ஓர் அவலமான சூழலில் தமிழகத்தில் அரசு நிர்வாகம் நடைபெற்று வருவது உண்மையாகவே பெரும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழகத்தின் எந்த திசையில் திரும்பினாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் மது மட்டுமின்றி, கள்ளச்சாராயமும் ஆறாக ஓடுகிறது. குற்றச்செயல்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பேண்டிய அரசு வீணான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழகத்தில் சட்டம், ஒழுக்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
8. தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது!
அமைதியான, வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் மாநிலம் என்பதற்கான எந்தத் தகுதியும் அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டிற்கு இல்லை. தமிழகத்தில் எந்தத் தரப்பினரும் இப்போது மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இல்லை என்பது தான் உண்மை. உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை; அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை; ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த இலவசக் கல்வியை திமுக அரசு நிறுத்தி விட்டது; தொழில் வளர்ச்சி சுருங்கி விட்டது; மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கவில்லை; பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தமிழகம் முழுவதும் தடையின்றி வெள்ளமாக பாய்கின்றன. எந்த நேரத்தில் எங்கு கொலையும், கொள்ளையும் நடக்குமோ? என்ற அச்சத்துடன் தான் மக்கள் நடமாட வேண்டியிருக்கிறது.
சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்பது கூட அவருக்கு தெரியவில்லை. திரைப்படங்களைப் பார்த்து மகிழ்வது, பாராட்டு விழாக்களை நடத்தி தம்மைத் தாமே மகிழ்வித்துக் கொள்வது உள்ளிட்ட செயல்களில் தான் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதே நிலை நீடித்தால், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை நிலையாகும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமையாகும். எனவே, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசை அகற்றவும், அதற்காக மிகக் கடுமையாக உழைக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுதியேற்கிறது.
The post ராமதாஸ் கூட்டிய செயற்குழு சட்டவிரோதமானது: அன்புமணி நடத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.