
புதுடெல்லி,
நாடு முழுவதும் ராம நவமி இன்று (ஏப்ரல் 06) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராம நவமியையொட்டி பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், வீரம் உள்ளிட்ட உயர்ந்த கொள்கைகளை ராமர் வழங்கினார். வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். புனித பண்டிகையான ராம நவமியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.