
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றவுடன், "அமெரிக்கா முதலில்" என்ற கோஷத்தை கையில் எடுத்து "பரஸ்பர வரி" என்ற தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, கடந்த 2-ந் தேதி பரஸ்பர வரியை அறிவித்தார். அதில் நட்பு நாடான இந்தியாவுக்கும் 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. எனவே மத்திய அரசு, இந்த வரி சுமையை எதிர்கொள்ள கொள்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்தியாவை போல சீனாவிற்கும், டிரம்ப் 34 சதவீதம் வரி விதித்தார். ஏற்கனவே கடந்த மாதம்தான் சீனாவிற்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. எனவே இப்போது போடப்பட்டுள்ள வரியையும் சேர்த்தால் சீனாவிற்கு வரி 54 சதவீதம் வரை சென்று விட்டது.
அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரிக்கு, சீனா "பதிலடி வரி" விதித்து அமெரிக்காவை தற்போது அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. அதாவது, அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், 34 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. சீனா, இந்த பதிலடி வரியோடு நிற்காமல் அமெரிக்கா மீது பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதன்படி சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிதான தாது கனிமங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யும் 6 நிறுவனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சோளம் மற்றும் கோழி இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களாகும்.
11 அமெரிக்க நிறுவனங்களை "நம்பமுடியாத நிறுவனங்கள்" பட்டியலில் சீனா சேர்த்து விட்டது. இதில் அமெரிக்காவில் உள்ள ஸ்கைடியோ டிரோன் நிறுவனமும் அடங்கும். 16 அமெரிக்க நிறுவனங்களுக்கு 'இறக்குமதி கட்டுப்பாடு' விதித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் சிடி எக்ஸ்ரே டியூப்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது தவிர, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் சீனா சட்டப்பூர்வமான வழக்கு ஒன்றும் தொடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு, டிரம்ப் ஆசைப்படும் ''அமெரிக்காவை முதன்மைப்படுத்தாது. உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்தும்" என்றும் சீனா பகிரங்கமாக மிரட்டியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை, அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா பரஸ்பர வரியை விதித்தவுடன், தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். யாரும் பதிலடி கொடுக்கவில்லை. சீனா மட்டும் தைரியமாக தன் நடவடிக்கையை அமெரிக்கா மீது எடுத்து விட்டது. சீனாவின் பதிலடி வரி அறிவிப்பு வந்தவுடன் டிரம்ப், "சீனா தவறான ஆட்டத்தை ஆடி விட்டது. சீனாவுக்கு திடீர் அச்ச உணர்வு ஏற்பட்டு விட்டது. அவர்களால் இதை செய்ய முடியாது'' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் சீனாவுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது போல தெரியவில்லை, நீ என்ன செய்தாலும் நான் பதிலுக்கு பதில் செய்வேன் என்ற துணிச்சல் மிக்க நிலைப்பாட்டை எடுத்து இருப்பது போல தெரிகிறது. சீனாவை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கினால் அமெரிக்காவுக்கு சிக்கல்தான்.