
மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரமான ராமவதாரத்தை சிறப்பிக்கும் வகையில், ராம பிரான் அவதரித்த நவமி தினம், ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ராம பக்தர்கள் விரதம் இருந்தும் பிரார்த்தனை செய்தும் ராமரை வழிபடுகிறார்கள். கோவில்களுக்குச் சென்று ராமாயண நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள்.
அவ்வகையில், இன்று ராம நவமி (6.4.2025) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு உற்சவங்கள், பஜனைகள் மற்றும் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று காலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடைபெறுகின்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பகவானை தரிசனம் செய்கின்றனர். ஆலய வளாகத்தில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஆன்மிக ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றதுடன், மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ராம நவமியை முன்னிட்டு கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும், செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும் என்பது ஐதீகம்.