
ஸ்ரீநகர்,
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.
இருப்பினும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு நாடே தலைவணங்குகிறது. ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும். எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது என்றார்.
பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மோதல் மூண்ட நிலையில் ராஜ்நாத் பயணம் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக பாதாமி கண்டோன் மெண்டில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.