
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து வீட்டின் அருகில் உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், எனவே, கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜி.பி.முத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கினார். இதையடுத்து கோவில் கட்டுமான வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், கோவில் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் ஜி.பி.முத்துவின் வீட்டை நேற்று திடீரென்று முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ஜி.பி.முத்து, பதிலுக்கு ஊர் மக்களிடம் சில ஆவணங்களை காண்பித்தவாறு கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில், பாதை தொடர்பான பிரச்சினையில் ஜி.பி.முத்து, ஊர் மக்கள் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. ஜி.பி.முத்து வீட்டுக்கு செல்லும் வகையில் பாதை அமைத்து கோவில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.பி.முத்து கூறியதாவது:- தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாங்களும், எதிர்தரப்பினரும் வந்திருந்தனர். பாதை தொடர்பான ஆக்கிரமிப்பில் எந்தவிதமான பிரச்சினையும் வராது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் என்று கூறினார்.