
பெங்களூரு,
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்த அதிரடி வேட்டையில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சியினர் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்திய ராணுவம் மீது எங்களுக்கு மிகுந்த பெருமை உள்ளது. அவர்கள் நமது நாட்டின் கவுரவம், நலனை காக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அனைவரும் பலமாக இருப்போம். ராணுவத்திற்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும். ராணுவத்திற்கு பக்க பலமாக காங்கிரஸ் நிற்கும். பஹல்காம் தாக்குதலில் கர்நாடகத்தினர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவா்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விஷயத்தில் நாம் கர்நாடகம் என்று மட்டும் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்று தான் என்று நாம் பாா்க்க வேண்டும். நாம் அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக நிற்க வேண்டும். அதே போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு நிம்மதி கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.