ராணுவ வீரர்கள் எல்லைக்கு சென்று சண்டை போட்டார்களா? பிரதமரைதான் பாராட்ட வேண்டும் - செல்லூர் ராஜு

5 hours ago 1

சென்னை,

பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவ படைகளுக்கு ஆதரவாக இன்று மாலை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இந்நிலையில், தி.மு.க.வினர் பிரதமர் மோடிக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"ஒவ்வொரு இந்தியனும் பாரத பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும், மத்திய மந்திரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட வயதான தலைவர்களின் அனுபவத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி அற்புதமான பணியை செய்து வருகிறார்.

இரண்டு நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

ராணுவ வீரர்கள் எல்லைக்கு சென்று சண்டை போட்டார்களா? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே தி.மு.க.வினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்."

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார். 

Read Entire Article