
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதுமுள்ள 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை டெல்லியில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வரவேற்றார். இதன்பின்னர் மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர், ஈரான் வெளியுறவு துறை மந்திரி மற்றும் அவருடன் வந்துள்ள குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது மந்திரி ஜெய்சங்கர் பேசும்போது, இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த காட்டுமிராண்டித்தன தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்துள்ள தருணத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளீர்கள்.
இந்த தாக்குதலானது, மே 7-ந்தேதி எல்லை கடந்த பயங்கரவாத உட்கட்டமைப்பை நாங்கள் தாக்க வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை தள்ளியது. எங்களுடைய பதிலடி, இலக்கை குறி வைத்தும் மற்றும் மதிப்பிடப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. பதற்ற சூழலை அதிகரிப்பது எங்களுடைய நோக்கம் இல்லை.
எனினும், எங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால், மிக மிக உறுதியான பதிலடி இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அண்டை நாடாக மற்றும் நெருங்கிய நட்பு நாடாக, இந்த சூழ்நிலையை பற்றிய ஒரு நல்ல புரிதலை நீங்கள் கொண்டிருப்பீர்கள் என்பது முக்கியம் என பேசியுள்ளார்.