
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
சுகுமார் (வயது 18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இந்ந நிலையில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சுகுமார் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பும்போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 600-க்கு 443 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றுள்ளார். சிறுவயது முதலே கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து தற்போது நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், சாலை விபத்தில் மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.