ராணிப்பேட்டை அருகே நள்ளிரவு பரபரப்பு; காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: 10 பேரிடம் விசாரணை

2 hours ago 1

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே காவல்நிலையம் மற்றும் அரிசி கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக 10பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவல் நிலையம் உள்ளது. நள்ளிரவு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர் மற்றும் பொதுமக்கள் அமரும் இடத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து கரும்புகை சூழ்ந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல்
தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொருட்களுக்கோ, ஆட்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இதேபோல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஜார் வீதியில் உள்ள அரிசிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி விவேகானந்த சுக்லா சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைத்தும் உத்தரவிட்டார். ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 2 தனிப்படை போலீசார் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் 10பேரை பிடித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம், அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராணிப்பேட்டை அருகே நள்ளிரவு பரபரப்பு; காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: 10 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article