
புதுடெல்லி,
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத சம்பவங்களில் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலும் ஒன்று. அந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள், நகரின் முக்கிய பகுதிகளில் வெறியாட்டம் போட்டனர். இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையை சுமார் 60 மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கண்ணில் கண்ட அப்பாவிகளை கொன்று குவித்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த இந்த பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 238 பேர் காயமடைந்தனர்.
ரெயில் நிலையம், ஆடம்பர ஓட்டல்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த கொடிய சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர்களையும் இந்தியாவின் விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்தன.அதன்படி பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி மற்றும் அவனது கூட்டாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடா தொழில் அதிபர் தஹாவூர் ராணா (வயது 64) ஆகிய இருவரும் இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு மூளையாக இருந்தது தெரியவந்தது.
இதில் ஹெட்லி 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார். அங்கும் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், அமெரிக்காவிலேயே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.அதே ஆண்டில் தஹாவூர் ராணாவும் அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கியிருந்தார். பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்ததால் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்தது. இதற்கும் பலனும் கிடைத்தது. நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ராணா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வர உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமெரிக்கா விரைந்தது. பின்னர் ராணாவை அழைத்து வருவதற்கான நடைமுறைகளை அங்கே மேற்கொண்டது.
இந்த நடைமுறைகளை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் ராணாவை இந்தியா அழைத்து வந்தனர். இந்த விமானம் டெல்லியில் நேற்று தரையிறங்கியது. டெல்லி வந்தடைந்ததும் அவரை முறைப்படி என்.ஐ.ஏ போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு என்.ஐ.ஏ. கோர்ட் சிறப்பு நீதிபதி முன் ராணாவை ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ. போலீசார் 20 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து ராணாவிடம் என்.ஐ.ஏ.போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.