
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இப்போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் வார்னரின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதாவது, குஜராத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் 79 ரன்களைச் எடுக்கும் பட்சத்தில் ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்களை பூர்த்தி செய்வார். இந்த போட்டியில் அவர் அதனை செய்தால் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் பெருமையையும் பெறுவார்.
முன்னதாக டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. கே.எல். ராகுல் இதுவரை 137 போட்டிகளில் விளையாடி 128 இன்னிங்ஸ்களில் 4,921 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவர் 4 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5,000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 157 இன்னிங்ஸ்களுடன் இரண்டாம் இடத்திலும், டி வில்லியர்ஸ் 161 இன்னிங்ஸ்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள்:
டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
டி வில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா - 173 இன்னிங்ஸ்