
சென்னை,
1999-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைவரும் பாராட்டும்படி அமைந்தது. அதுவே, 2005-ம் ஆண்டு அவர் தே.மு.தி.க.வை தொடங்கியபோது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.2006-ம் ஆண்டு அக்கட்சி சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
அதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார் என்றாலும் 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து, 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை அள்ளியது. அதில், ஒருவர்கூட வெற்றி பெறாவிட்டாலும் அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதுவே, 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வழிவகை செய்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்பட்ட 41 இடங்களில் 29-ல் வெற்றி பெற்று அசத்தியது. 7.88 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கும் உயர்ந்தது.
ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதே, அ.தி.மு.க.வுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் எதிரிக்கட்சியாகவே மாற வேண்டிய நிலை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டது. அதன்பிறகு, தே.மு.தி.க. தலைமை எடுத்த ஒவ்வொரு முடிவும் தேர்தல்களில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க. 14 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாக்கு சதவீதமும் 5.1 ஆக குறைந்தது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, 3-வது அணியாக உருவான மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்த தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணை கவ்வியது. வாக்கு சதவீதமும் 2.4 ஆக சரிந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க. 4 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்தது.
இப்படியே சறுக்கலை சந்தித்து வந்த தே.மு.தி.க. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் களம் இறங்கியது. அதில், ஒன்றில்கூட வெற்றி பெறாத நிலையில் வாக்கு சதவீதமும் 0.48 என்ற அளவுக்கு அதல பாதாளத்துக்கு சென்றது.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது மீண்டும் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த தே.மு.தி.க. 5 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில், அதாவது 4,500 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 2.58 ஆக இருந்தது.
தொடர்ந்து, அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி தே.மு.தி.க. கொடிநாள் விழாவின்போது பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" என்று அறிவித்தார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, "அப்படி எதுவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை" என்று கைவிரித்துவிட்டார். இதனால், தே.மு.தி.க.வினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மறைந்த விஜயகாந்தின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "சத்தியம் வெல்லும்; நாளை நமதே" என்று பதிவிடப்பட்டது. பின்னர், சற்று நேரத்தில் அந்தப் பதிவும் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், இனியும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறதா? அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து அக்கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டோம். ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்கும்படி கூறியுள்ளனர்" என்றார். அப்படி என்றால், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்.