
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது நங்கூரமாக நின்று அரைசதம் அடித்த விராட் கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்த தொடருக்கு முன்னதாக பெரும் விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, தற்போது முக்கியமான தருணத்தில் மீண்டும் பார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்து இந்த உலகிற்கு மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் விராட் கோலியை பாராட்டி பேசியுள்ளார். மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பெரிய சவாலை சமாளிப்பதற்கான சுபாவம் அவரிடம் (விராட் கோலி) இருக்கிறது என்று நினைக்கிறேன். அதிலிருந்துதான் அவர் தனக்கான ஆற்றலை பெறுகிறார். அந்த அழுத்தத்தில் விளையாடுவதை அவர் விரும்புகிறார். அவரைப் போன்ற சுபாவம் சில வீரர்களுக்கு மட்டுமே இருக்கும். நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதை செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடும் மற்றொரு அணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது" என்று கூறினார்.