சென்னை, -
சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் லக்கானி, கடந்த 1992-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர், அந்த ஆண்டு தர்மபுரியில் உதவி கலெக்டராக தனது பணியை தொடங்கினார். பின்னர் 2003 முதல் 2004-ம் ஆண்டு வரை கன்னியாகுமரியிலும், 2005 முதல் 2006-ம் ஆண்டு வரை தேனியிலும் கலெக்டராக பணிபுரிந்தார்.
தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட், சுற்றுலாத்துறை ஆகியவற்றின் செயலாளராகவும் இருந்தார். 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.
அதன்பின் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவராகவும் பணியாற்றினார். இப்போது கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனராக இருக்கிறார். 33 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்றிய அவர், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகளின் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே அவர் விரைவில் அந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.