ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய பணத்தை மோசடி செய்த பெண் அலுவலர் உட்பட 2 அலுவலர்கள் கைது

1 month ago 8

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய பணத்தை மோசடி கணக்கெழுதி கையாடல் செய்த பெண் அலுவலர் உட்பட 2 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், குறிப்பிட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ தொகையை மருத்துவமனையில் செலுத்திவிட்டு சென்றதாகவும், இந்த தொகையை மருத்துவமனை அலுவலர்கள் சிலர் மோசடி கணக்கெழுதி பணத்தை அபகரித்துள்ளதாகவும், மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் (Dean) அவர்கள் C-4 இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

C-4 இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், இம்மருத்துவமனையில் குறிப்பிட்ட சில மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து செல்லும்போது, பணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், இந்த பிரிவில் உள்ள குபேரன் மற்றும் கலைமகள் ஆகிய அலுவலர்கள், நோயாளிகள் செலுத்தும் பணத்திற்கு உரிய ரசீது வழங்கியும், மருத்துவமனை பதிவேட்டில் குறைவான தொகையை குறிப்பிட்டும், மீதம் பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட இம்மருத்துவமனை அலுவலர்கள் 1.குபேரன், வ/50, த/பெ.எத்திராஜ், முத்தையா தெரு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை, 2.கலைமகள், வ/44, க/பெ.ராஜ்குமார், மேட்டு தெரு, காமராஜர் நகர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய பணத்தை மோசடி செய்த பெண் அலுவலர் உட்பட 2 அலுவலர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article