நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்து உள்ளதாக, பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதும் குளங்கள், வயல்வெளிகள், நன்னீர் பகுதிகள் அதிகம் இருப்பதும் பறவைகளின் புகலிடமாக உள்ளன. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. அவ்வாறான இடங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. ஆனால் அவை இங்கு இனப்பெருக்கம் செய்வது இல்லை. இங்குள்ள நீர்நிலைகளில் பறவைகளுக்கு தேவையான புழுக்கள், பூச்சிகள், நண்டு, வெட்டுக்கிளிகள், சிறிய மீன்கள், நத்தைகள், தவளை, தாவரங்கள் தாராளமாக உணவாக கிடைக்கின்றன.
சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மணக்குடி காயல் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பறவைகளை பார்த்து ரசிக்க வசதியாக தேரூர் குளத்தின் அருகில் கண்காட்சி கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மனிதர்கள் செய்யும் தவறுகளால், பறவைகளின் வரத்து குறைந்தது. கடந்த 2018 ல் ஓகி புயலின் தாக்கத்துக்கு பின், சீதோஷ்ண நிலையும் மாறியது. இது மட்டுமின்றி நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு, குளங்களில் ஆகாய தாமரை வளர்ப்பு, தீ வைத்தல், பறவைகளை வேட்டையாடுதல் போன்றவற்றால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்தது. மனித தலையீடுகளால் பறவைகளின் வாழிடங்கள் பறிக்கப்பட்டன. வேதி பொருட்களால் செய்யப்பட்ட சோப் துணி துவைக்கவும், குளிப்பதற்கும் இந்த குளங்களில் பயன்படுத்துவதால் பறவைகள் இறக்க நேரிடுகிறது.
மேலும் பறவைகளின் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாமல் போகிறது. இதனால் சில பறவை இனங்கள் அழிந்து போகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன. நீர்நிலைகளை நம்பி வாழ்கின்ற தாமரை இலை கோழி போன்ற பறவைகள் இன அழிவின் விழிம்பில் உள்ளதற்கு மனித செயல்களே காரணமாக உள்ளது என்பது பறவை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். ஆண்டுதோறும் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் பறவை இனங்களின் வரத்து குறைந்து வருவதை காண முடிகிறது. குமரி மாவட்டத்தில் நீர்க்காகம், முக்குளிப்பான், வெண்கொக்கு, பாம்புதாரா, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா, வர்ணநாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக்கோழி, கானங்கோழி, நாமத்தாரா, வெள்ளை ஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது. வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து பல பறவைகள் குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வருகின்றன.
ஆஸ்பிரே, புளோவர், சிவப்பு ஷாங்க், பச்சை ஷாங்க், சாண்ட் பைப்பர், டெர்ன், ஊசிவால் முனை வாத்து, சாதாரண டில், சிறிய டெர்ன், காஸ்பியன் டெர்ன் ஹோவெலர், பிளமிங்கோ ஆகியன வெளிநாடுகளில் இருந்து குமரி நீர் நிலைகளுக்கு படையெடுக்கின்றன. சில இடங்களில் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள கழிவுநீர் குளங்களில் நேரடியாக வந்து சேருவதால் நீரின் தரம் குறைவதுடன் நீரில் நச்சுத்தன்மை அதிகரித்து பறவைகளின் அடிப்படை உணவு பொருளான மீன்கள் மடிந்து போகின்றன. நீர்நிலைகளை ஒட்டிய சாலைகளில் பெரும் இரைச்சல் ஒலியாலும், புகையை கக்கிக்கொண்டு வாகனங்கள் செல்வதாலும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. பறவைகள் விவசாயத்திற்கு இடையூறாக இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் பறவைகள் பயிர்களுக்கு இடையூறாக உள்ள பூச்சிக்களைத்தான் உணவாக உட்கொண்டு பயிர்களை பாதுகாக்கின்றன என்பது சுற்றுச்சூழல் கல்வியாளர்களின் கருத்தாகும்.
பறவைகள் நம் சூழல் பாரம்பரியங்கள். மனித வாழ்வின் முக்கிய அம்சங்கள். விவசாயிகளின் நண்பர்கள். பறவைகள் விவசாய பயிர்களை அழிக்கின்ற புழுக்கள், பூச்சிகள், நண்டு நத்தைகளை உணவாக உட்கொள்வதுடன் விவசாயிகளின் நண்பனாக திகழ்கின்றன. இவ்வாறு மனிதர்களுக்கு சேவை செய்யும் பறவைகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். அவற்றுக்கு எவ்வித தீமையோ, தடங்கலோ, அச்சுறுத்தலோ செய்யக்கூடாது. குமரி மாவட்ட குளங்களையும், ஏரிகளையும் சீரமைத்து ஆழப்படுத்த வேண்டும். குளங்களை ஆக்ரமித்துள்ள செடிகள், ஆகாயத்தாமரை போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தாமரைகள் வளர்வதை தடை செய்ய வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடம் பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு பறவைகள் நாம் அழையா விருந்தாளிகளாக வருவதை பெருமையாக கொள்ள வேண்டும். கண்ணைக்கவரும் பறவைகளை கண்டு ரசிக்கத்தக்க வகையில் சூழியல் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து, காட்சி கோபுரங்கள், பைனாகுலர்கள், வழிகாட்டிகள் ஆகிய வசதிகளை வனத்துறை ஏற்படுத்தி கொடுப்பதன் வாயிலாக சூழியல் சுற்றுலா மூலம் அரசின் வருவாயையும் பெருக்கிக்கொள்ள முடியும் என்பது பறவை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
The post நீர் நிலைகள் மாசு காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவு: குமரியில் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கவலை appeared first on Dinakaran.