ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சை கருத்து.. மணி சங்கர் அய்யருக்கு கட்சியில் வலுக்கும் எதிர்ப்பு

3 hours ago 1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அடிக்கடி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்ளை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அவர் கூறும் கருத்துகள் காங்கிரசுக்கு எதிராகவே திரும்புவதால் கட்சி தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள். இப்போது ராஜீவ் காந்தி குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மணிசங்கர் அய்யர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தி விமான பைலட். ஆனால் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்துள்ளார். நான் அவருடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அங்கு அவர் தோல்வியடைந்தார். கேம்பிரிட்ஜில் தோல்வி அடைவது என்பது கடினம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எளிது. ஏனென்றால், பல்கலைக்கழகம் தனது இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதால், அனைவரையும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்த முயற்சிக்கும். பின்னர் அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரி தேர்விலும் தோல்வியடைந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிரதமராக முடிந்தது? அவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர் ஒரு சிறந்த பிரதமர் என்று இப்போது சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் இம்பீரியல் கல்லூரியில் தோல்வியடைந்தது குறித்து பேசியதன் மூலம், காங்கிரஸ் கட்சி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளார் மணிசங்கர் அய்யர்.

அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் கூறியதாவது: பெயிலாவது பெரிய விஷயம் அல்ல. சிறந்த நபர்கள்கூட சில முறை பெயிலாகி உள்ளனர். ஆனால், ராஜீவ் அரசியலில் பெயிலாக வில்லை. பிரதமர் ஆக அவர் சிறந்த வெற்றியை கொடுத்துள்ளார். அவர் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்தார். தகவல் தொடர்பை மேம்படுத்தினார். அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார். ஐந்தாண்டுகளில் இதுபோன்ற சாதனை படைத்தவர்கள் வெகு சிலரே.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா கூறுகையில், "நீண்ட காலமாக கட்சியுடன் மணிசங்கர் அய்யர் தொடர்பில் உள்ளார். கட்சி அவரை எம்.பி., ஆக்கியபோது, ராஜீவை பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கவில்லையா? அவர் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த போதும், அவரை சோனியா தான் ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்தார். அவரின் அறிக்கைகள், அவர் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது" என்றார்.

மணிசங்கர் அய்யர் விரக்தியில் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கூறினார்.

மணி சங்கர் அய்யர் பேசிய வீடியோவை பாஜக தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, "திரை விலகட்டும்" என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், ராஜீவ் காந்தியின் வெற்றியை, பிரதமராக அவர் செய்த பணிகளின் அடிப்படையில் மதிப்பிடும்படி கூறி உள்ளது. 

Read Entire Article