
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ.10.8 கோடி வசூல் செய்தது. இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படமாக உருவாகியுள்ள 'மார்கோ' படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ஏ சான்றிதழ் காரணமாக இந்த படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் மறுக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், 'மார்கோ' படத்தின் பெயரை குறிப்பிடாமல், அதே சமயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்கள் குறைந்து, அதீத வன்முறை கொண்ட படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன என்று குற்றம் சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தணிக்கை வாரியத்தின் மூலம் இந்த படத்தை ஓடிடியில் ஒளிபரப்ப கொடுக்கப்பட்டிருக்கும் உரிமையையும் ரத்து செய்யும்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓடிடியிலும் 'மார்கோ' தடை செய்யப்படுமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.