
ஜெய்ப்பூர்,
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.
பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின. அந்தவகையில் பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களும், முசாபராபாத், கோட்லி, பிம்பர், குல்பூர், பர்னாலா போன்ற இடங்களில் உள்ள கட்டமைப்புகள் இந்தியாவின் தாக்குதலுக்கு இரையாகின.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடும் மற்றும் பயிற்சியளிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் தலைமையகங்கள், பயிற்சி முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த துல்லியமான அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஏராளமான பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த அதிரடி வேட்டையில் சுமார் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தன. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு எல்லையில் தற்போது பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது.
இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், எதிரிகளிடம் இருந்து எந்தவொரு பதிலடி அல்லது எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகளையும் தடுக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ராஜஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "எல்லைக்கு அருகில் கண்டறியப்பட்ட எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க BSF பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை பதட்டமாக உள்ளது, ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று கூறினார்.
பாகிஸ்தான் - ராஜஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.