
சென்னை,
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்ப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்ப்படி கடந்த மார்ச் 24-ம் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனிடையே ஸ்ரீகாளஸ்தி அருகே அஞ்சூர் என்ற பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த மதகு பழுதடைந்தது. இதனை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டதால் கடந்த மாதம் 24-ம் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் மதகு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 5-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணா தண்ணீர் ஸ்ரீ காளஸ்தி தாண்டி பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது. நாளை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜிரோ பாயிண்ட் பகுதிக்கு கிருஷா தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு காலை வினாடிக்கு 1,170 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.